கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மாறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு வட மேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் வட தமிழக கடலோர மாவட்டங்கள் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் , புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழைக்கும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல நவ. 23ஆம் தேதியையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர ஆணையருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.