ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஒன்று உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தமது கிராமத்தின் மீது விழுந்ததாக போலந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிழக்கு போலந்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் தானியங்களை உலர்த்தும் தொழிற்சாலையை பாதித்ததாகவும் இந்த சம்பவம் குறித்து ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
எவ்வாறாயினும் ரஷ்ய ஏவுகணைகள் போலந்து பிரதேசத்தை தாக்கியதாக வெளியான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
மேலும் இது நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் வேண்டுமென்றே செய்யப்படும் ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும் சாடியுள்ளது. நேட்டோ உறுப்பினரான போலந்தின் மீதான தாக்குதலால் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் மேலும் வலுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேட்டோ உடன்படிக்கையின் 4 வது பிரிவின் கீழ் நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிப்பது குறித்து போலந்து பரிசீலித்து வருகின்றது.அதன் ஒரு அங்கமாக போலந்து ஜனாதிபதி அண்ட்ரேஜ் டுடாவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் பேசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஜேர்மனியும் கனடாவும் நிலைமையை அவதானித்து வருவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் மேலதிக விவரங்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்தன.