காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக இன்று அந்தமான் கடல் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்தமானில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 12 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற்று ,வடக்கு நோக்கி நகர்ந்து மியான்மருக்கு செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் மியான்மர் கடலோரப் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் . வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் ,வட கிழக்கு வங்க கடல், தென் கிழக்கு வங்காள கடலோரப் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும். இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.