வங்க கடலில் உருவாகவுள்ள ஆசானி புயல் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நேற்று காலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணராயபுரத்தில் (கரூர்) 3 செண்டி மீட்டர் மழையும், நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஆரணி (திருவண்ணாமலை), மாயனூர் (கரூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), ஆரணி ஏஆர்ஜி (திருவண்ணாமலை) ஆகிய பகுதிகளில் தலா 2 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.