பருவம் அடைந்த பெண்களிடையே தற்போது பரவலாகக் காணப்படும் பிரச்சினை, கருப்பை நீர்க்கட்டி. டீன்-ஏஜ் முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் ஹார்மோன் கோளாறு இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் மூலம், கருமுட்டைகள் முதிர்ந்து வெளிவராமல், திரவங்கள் அடங்கிய குமிழ்களாக கருமுட்டைப் பையில் தங்கிவிடும். இதனால் உடலில் பல பிரச்சினைகள் உண்டாகும். அவற்றுள் முக்கியமானது முகப்பருக்கள் வருவது.
தோலுக்கு அடியில் அமைந்துள்ள ‘செபேஷியஸ்’ சுரப்பியில் இருந்து ‘சீபம்’ எனும் எண்ணெய்ப் பொருள் சுரக்கிறது. தோலின் மினுமினுப்புத் தன்மைக்கு இதுவே காரணம். மாசு மற்றும் தூசு போன்றவை இதில் படிந்து, சருமத் துளைகளை அடைத்துக் கொள்ளும்போது ‘சீபம்’ வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதனால் பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு சருமத்தில் பருக்கள் உருவாகின்றன.
இவ்வாறு உண்டாகும் முகப்பருக்களை நீக்குவதற்கான வழிகளைப் பற்றி பார்க்கலாம்.
முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு சரும ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமானது. தக்காளி, பிராக்கோலி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை வகைகள், மீன், எலுமிச்சைப் பழம் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது சருமம் வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் இருக்கும்.
கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, முகப்பரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். கிரீன் டீயில் இருக்கும் ‘பாலிபீனால்’ எனும் மூலக்கூறு, கிருமித்தொற்றுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இது முகப்பருக்கள் உண்டாவதைத் தடுக்கும்.
தேனில் உள்ள பொருட்கள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டவை. இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு, சில சொட்டு தேனை முகத்தில் தடவி காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். பருவினால் முகத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் தேனிற்கு உண்டு.
வேப்பிலைப் பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
அருகம்புல் பொடி, குப்பைமேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து தண்ணீர் ஊற்றிக் குழைத்து பருக்களின் மீது தடவலாம். தொடர்ந்து ஒரு வாரம் இவ்வாறு செய்து வந்தால் பருக்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.
முகப்பருக்களை நீக்குவதற்கு முடிந்தவரை ரசாயனங்களைத் தவிர்த்து, இயற்கை முறைகளைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.