மறைந்த கன்னட சினிமா உலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் தொடர்ந்து கண்தானம் செய்து வருவது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
சமூக சேவகர்:
நடிகர் புனித் ராஜ்குமார் கடந்தாண்டு அக்டோபர் 29ம் தேதி காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகை உலுக்கியது, நடிகர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் என்றெல்லாம் புகழாரம் சூட்டினர். குறிப்பாக 26 அனாதை இல்லங்களை தன்னுடைய சொந்த பணத்தில் நடத்தி வருவதுடன், 45 பள்ளிகளை நடத்தி அதில் இலவசமாக கல்வி கற்பித்து வந்தாராம். மேலும் வயதானவர்களுக்கான 16 இல்லங்கள், 19 பசு பாதுகாப்பு நிலையங்கள் ஆகியவற்றையும் நடத்தி வந்துள்ளார். இதுதவிர 1800 ஏழை எளிய குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் தானே ஏற்றுக்கொண்டு அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
கண் தானம்:
மரணத்திற்கு பின்னர் தன்னுடைய கண்களையும் தானம் செய்திருந்தார் புனித், இதன்படி அவர் இறந்த பின்னர் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு அவரது கண்கள் நான்கு பேருக்கு பொருத்தப்பட்டது. இதனையடுத்து கண் தானத்தின் முக்கியத்துவத்தினை அறிந்த அவரது ரசிகர்கள் அதிகப்படியாக கண் தானம் செய்ய முன்வந்துள்ளனர்.மிகக்குறிப்பாக பெங்களூருவில் உள்ள நாராயண நேத்ராலயா என்கிற தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 70,000த்திற்கும் மேற்பட்ட கண் தானங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மாதம் 50 கண்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது 250 கண்கள் வரை தானமாக வருகிறதாம். புனித் மறைந்தாலும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து கண்தானம் செய்து வருவதை அறிந்த மக்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.