மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். ஸ்மிருதி மந்தனா 10 ரன்களிலும், ஷஃபாலி வர்மா 12 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனையடுத்து களமிறங்கிய யாஷிகா பாட்டியா மற்றும் கேப்டன் மித்தாலி ராஜ் ஆகியோர் சிறப்பான கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். யாஷிகா பாட்டியா 59 ரன்கள் எடுத்து அவுட்டாகிய நிலையில், மித்தாலி ராஜ் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. ஹர்மன்ப்ரீத் கவூர் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. அந்த அணி 49.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 280 எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மெக் லான்னிங் 97 ரன்களும், அலைசா ஹீலி 65 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது.