உலகில் அதிகமாக மழை பெய்யக்கூடிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றது. ஒரு சில இடங்களில் மழை 10,000 மில்லி மீட்டருக்கும் அதிகமாக பொழிகிறது. இப்படி உலகில் அதிக அளவில் மழை பொழியக்கூடிய டாப் 10 இடங்கள் எங்கு உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.
10. எமி ஷான், சிச்சுவான் மாகாணம், சீனா (Emei Shan, Sichuan Province, China):
சீனாவின் சிச்சுவானில் உள்ள எமி ஷானில் பெய்யும் சராசரி ஆண்டு மழை 8169 மில்லி மீட்டர். இங்குள்ள எமி மலை 10,167 அடி உயரம் கொண்டது. சீனாவின் நான்கு புனித புத்த மலைகளில் இதுவும் ஒன்று. மட்டுமல்லாமல் சீனாவில் அதிக மழையைப் பெறும் இடம் இது. இந்த இடம் மேகங்கள் கடல் என்று அழைக்கப்படுகிறது. பருவமழையின் போது இந்த இடம் இரண்டு அடுக்கு மேகங்களை ஈர்க்கிறது. இதன் காரணமாக இங்கு அதிக மழை பொழிகிறது.
9. குகுய், மௌய், ஹவாய் (Kukui, Maui):
ஹவாயின் மௌயில் உள்ள புயூ குகுயில் சராசரி பெய்யும் ஆண்டு மழை 9293 மில்லி மீட்டர். புயூ குகுய் ஹவாயில் உள்ள ஒரு மலை உச்சி. இது மௌனா கஹலவாய் மேற்கு மௌய் மலைகளில் உள்ள மிக உயர்ந்த சிகரம். மார்ச் 1942 இல் புயூ குகுயில் கிட்டத்தட்ட 2565.4 மில்லி மீட்டர் மழை பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டில் 17902 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு இங்கு இருந்துள்ளது.
8. மவுண்ட் வையாலேலே, காயுய், ஹவாய் (Mt Waialeale, Kauai, Hawaii):
ஹவாயின் காயுய் தீவில் உள்ள மவுண்ட் வையாலேலேவில் பெய்யும் சராசரி ஆண்டு மழை 9763மில்லி மீட்டர். மவுண்ட் வையாலேல் என்ற பெயருக்கு overflowing water அதாவது நிரம்பி வழியும் நீர் என்று பொருள். காயுய்யில் உள்ள மற்ற மலைச் சிகரங்களில் பெய்யும் மழையை விட இந்த மலையானது ஐந்து மடங்கு மழையைப் பெறுகிறது.
7. பிக் போக், மௌய், ஹவாய் (Big Bog, Maui, Hawaii):
ஹவாயின் மௌயில் உள்ள பிக் போக்கில் பெய்யும் சராசரி ஆண்டு மழை 10,272 மில்லி மீட்டர். இங்கு மழை பெய்யாமல் இருந்தாலும் பல நேரங்களில் மேகமூட்டமாகவோ அல்லது பனிமூட்டமாகவோ இருக்கும். தொடர்ந்து மழை பெய்தாலும் பிக் போக் பசுமையான இயற்கைக்காட்சிகளை விரித்து வைத்திருப்பதால் மௌய்யில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது.
6. டிபண்ட்ஷா,கேமரூன், ஆப்ரிக்கா(Debundscha, Cameroon, Africa):
ஆப்ரிக்காவின் கேமரூனில் உள்ள டிபண்ட்ஷாவில் பெய்யும் சராசரி ஆண்டு மழை பொழிவு 10,299 மில்லி மீட்டர். டிபண்ட்ஷா கிராமம் ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமான கேமரூன் மலையின் அடிவாரத்தில் உள்ளது. மலை மேகங்களைத் தடுப்பதால் இந்த இடத்தில் அதிக மழைப்பொழிவு இருப்பதாக நம்பப்படுகிறது.
5. சான் அன்டோனியோ டி யுரேகா, பயோகோ தீவு, எக்குவடோரியல் கினியா (San Antonio de Ureca, Bioko Island, Equatorial Guinea):
எக்குவடோரியல் கினியாவின் பயோகோ தீவில் உள்ள சான் அன்டோனியோ டி யுரேகாவில் பொழியும் சராசரி ஆண்டு மழை 10,450 மில்லி மீட்டர். இங்கு நவம்பரிலிருந்து மார்ச் தவிர மீதமுள்ள மாதங்களில் கடுமையான மழை பெய்யும். மழை இல்லாத பொழுது கடற்கரையில் ஆமைகள் முட்டையிடுவதற்காக கரைக்கு வருவதைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் இங்கு வருகிறார்கள்.
4. க்ராப் ரிவர், நியூசிலாந்து (Cropp River, New Zealand):
நியூசிலாந்தின் க்ராப் ரிவர் பகுதியில் சராசரி ஆண்டு மழை 11,516 மில்லி மீட்டர். இந்த நதி 9 கிமீ நீளம் மட்டுமே இருக்கும். 1995ம் ஆண்டு டிசம்பர் 12 மற்றும் 13 இல் 48 மணி நேரத்தில் 1,049 மில்லிமீட்டர்கள் மழை இங்கு பெய்துள்ளது. 2019 ம் ஆண்டு மார்ச் 25 மற்றும் 26 ல் இங்கு 48 மணிநேரத்தில் 1,086 மில்லிமீட்டர்கள் மழை பெய்தது. நியூசிலாந்தில் 48 மணிநேரத்தில் அதிக மழை பெய்தது இதுதான்.
3. டுடென்டோ, கொலம்பியா, தென் அமெரிக்கா (Tutendo, Colombia, South America):
தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் உள்ள டுடென்டோவில் சராசரி ஆண்டு மழை 11,770 மில்லி மீட்டர். டுடுனெண்டோ சோகோ டிபார்ட்மெண்டில் உள்ள ஒரு சிறிய நகரம்.இங்கு 1,000க்கும் குறைவான மக்கள் வசிக்கிறார்கள். இதன் அண்டை நகரமான குயிப்டோ உலகின் அதிக மழைப்பொழியும் நகரமாகக் கருதப்படுகிறது.
2. சிரபுஞ்சி, மேகாலயா மாநிலம், இந்தியா (Cherrapunji, Meghalaya State, India):
மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 11,777 மில்லி மீட்டர். சிரபுஞ்சியின் உயரம் காரணமாக கீழே உள்ள சமவெளிகளில் வீசும் காற்று உயரமான இந்த இடத்திற்கு வரும் போது குளிர்ச்சியடைகிறது. இது மழை மேகங்களை உருவாக்கி அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. அதிக மழை பெய்தாலும் குளிர்காலத்தில் இந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறைஏற்படுகிறது. சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு மழை பெய்யாது. சில சமயங்களில் இப்பகுதியில் 15 லிருந்து 21 நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும்.
1. மவ்சின்ராம், மேகாலயா மாநிலம், இந்தியா (Mawsynram, Meghalaya State, India):
மேகாலயா மாநிலத்தில் உள்ள மவ்சின்ராமில் பொழியும் சராசரி ஆண்டு மழை 11,871 மில்லி மீட்டர். சிரபுஞ்சியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் வருடத்திற்கு சில முறை வெள்ளம் கிராமத்தின் தெருக்களை அருவிகளாக மாற்றும். ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராமம் கிட்டத்தட்ட 12 மீட்டர் மழையால் அடித்துச் செல்லப்படுகிறது. கிராமவாசிகள் அதற்குப் பழகிவிட்டனர். வங்காள தேசம் மற்றும் வங்காள விரிகுடாவிற்கு அருகில் மவ்சின்ராம் இருக்கும் காரணத்தால் அதிக மழை இங்கு பொழிகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.