சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அங்கு மீண்டும் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு, சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. வைரஸ் பரவ தொடங்கிய போது பெரும் சவாலை சந்தித்தது சீனா. இருந்த போதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தியது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டன. மற்ற நாடுகளை காட்டிலும் சீனாவில் கொரோனா பாதிப்பு குறைவான அளவிலேயே இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் நூற்றுக்கணக்கில் பதிவான தினசரி கொரோனா பாதிப்பு தற்போது சராசரியாக 2 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக அங்குள்ள பல்வேறு நகரங்களில் தொற்று பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல இடங்களில் தற்காலிக தற்காலிக பரிசோதனை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மையங்களுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலை முதலே குளிருக்கு மத்தியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு அதிகரித்து காணப்படும் ஜுலின் உள்ளிட்ட மாகாணங்களில் தற்காலிக மருத்துவமனை கட்டும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.