உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் இனி வேல்ஸ் முழுவதும் இரயில் சேவைகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் கூறுகையில், ‘வேல்ஸ் எங்கள் உதவி தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் புகலிடம் என்பதை காட்டும் மற்றொரு நடவடிக்கை. வேல்ஸுக்கு வரும் உக்ரைனியர்களுக்கு அன்பான வரவேற்பு உள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் உக்ரைனுக்கான வீடுகள் திட்டத்திற்கு வேல்ஸ் ஒரு சுப்பர் ஸ்பான்சராக மாற விரும்புகிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். இது மூன்று வருடங்கள் வரை பிரித்தானியாவுக்கு மக்கள் வருவதற்கு பாதுகாப்பான வழியை வழங்கும்’ என கூறினார்.
உக்ரைனிய குடிமக்கள் இலவச பயணத்தை கோருவதற்கு, நடத்துனர்கள் மற்றும் நிலைய ஊழியர்களிடம் தங்கள் கடவுச்சீட்டை காட்ட வேண்டும்.
பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனிய அகதிகளுக்கு 10,000 குடும்பங்கள் வீடு கட்ட விருப்பம் தெரிவித்துள்ளதாக வேல்ஸ் செயலர் சைமன் ஹார்ட் கூறியதற்கு பிறகு இந்த செய்தி வந்துள்ளது.
இலவச இரயில் பயண முன்முயற்சியானது, வேல்ஸில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்தை வழங்கும் தற்போதைய வேல்ஸ் அரசாங்கத் திட்டத்தின் விரிவாக்கமாகும்.