ஆதிகாலத்திலிருந்தே மனிதர்களுக்கு ஆறுகள் மிக முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. மனிதர்களின் நாகரிகம் ஆறுகளின் அருகில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. இப்படி உலகின் மிகவும் பிரபலமான பத்து ஆறுகளை பற்றி பார்க்கலாம்.
1. செபிக் ஆறு (Sepik River):
செபிக் ஆறு நியூ கினியா தீவில் உள்ள மிக நீளமான ஆறு. பப்புவா நியூ கினியாவின் மத்திய மலைப்பகுதிகளில் விக்டர் இமானுவேல் மலைத்தொடரில் இருந்து இந்த ஆறு உருவாகிறது. அமேசான் நதியைப் போல பாம்பு வடிவில் வளைந்து நெளிந்து பிஸ்மார்க் கடலுக்கு செல்கிறது. பல பெரிய நதிகளைப் போலல்லாமல் செபிக் ஆறு டெல்டா இல்லாமல் நேராக கடலில் பாய்கிறது. செபிக் ஆற்றின் மொத்த நீளம் 1,126 கிலோமீட்டர்கள்.
2. மிசிசிப்பி ஆறு (Mississippi River):
சுமார் 3,730 கிலோமீட்டர் நீளமுள்ள மிசிசிப்பி ஆறு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நதி அமைப்பாகும். இந்த நதி இட்டாஸ்கா ஏரியில் உருவாகிறது. முக்கிய துணை நதியான மிசோரி நதியுடன் சேர்ந்து இந்த நதி 31 அமெரிக்க மாநிலங்களின் வழியாக செல்கிறது. புகழ்பெற்ற நீராவிப் படகுகள் 1820களில் இந்த நதியில் மிதந்து வர்த்தகத்தில் ஈடுபட்டன. பருத்தி, மரம் மற்றும் உணவு ஆகியவை இந்த ஆற்றின் வழியாக கொண்டு செல்லப்பட்டன. 1880 களில் இரயில் பாதைகளின் வருகைக்குப் பிறகு நீராவிப் படகு போக்குவரத்து குறைந்துவிட்டது. இருப்பினும் அவை 1920 கள் வரை முக்கியமானதாக இருந்தன.
3. வோல்கா ஆறு (Volga River):
வோல்கா ஐரோப்பாவின் மிக நீளமான ஆறு. அதோடு ரஷ்யாவின் மிக முக்கியமான நதிகளில் ஒன்று. ரஷ்யாவின் 20 பெரிய நகரங்களில் தலைநகர் மாஸ்கோ உட்பட 11 நகரங்கள் வோல்காவின் வடிகால் படுகையில் அமைந்துள்ளன. இது மாஸ்கோவின் வடமேற்கே உள்ள வால்டே ஹில்ஸில் 740 அடி உயரத்தில் உருவாகி 3,645 கிலோ மீட்டர் தூரம் பயணித்து காஸ்பியன் கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களுக்கு இந்த ஆறு அதன் நீளத்தின் பெரும்பகுதி பனியால் உறைந்து போகிறது. வோல்கா ஆறு ரஷ்யாவில் உள்நாட்டு கப்பல் மற்றும் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
4. ஜாம்பேசி ஆறு (Zambezi):
3,540 கிலோமீட்டர் நீளமுள்ள ஜாம்பேசி நதி ஆப்பிரிக்காவின் நான்காவது நீளமான நதியாகும். இந்த நதி வடமேற்கு சாம்பியாவில் தொடங்கி அங்கோலா வழியாக, நமீபியா, போட்ஸ்வானா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் எல்லைகளில் பாய்ந்து மொசாம்பிக் வரை செல்கிறது. அங்கு இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. ஜாம்பேசியின் மிக அற்புதமான அம்சம் அழகான விக்டோரியா நீர்வீழ்ச்சி ஆகும். இந்த ஆறு பல விலங்குகளின் பாதுகாவலனாக இருக்கிறது. ஆற்றின் பெரும்பாலான பகுதிகளில் நீர்யானைகள் ஏராளமாக உள்ளன. மேலும் பல முதலைகளும் உள்ளன. பெரிய இனங்கள் உட்பட பல நூறு வகையான மீன்களையும் ஜாம்பேசி ஆற்றில் காணலாம். மனிதர்கள் பலரையும் தாக்கும் புல் ஷார்க்(bull shark) இந்த ஆற்றில் காணப்படுகிறது.
5. மீகாங் ஆறு (Mekong River):
மீகாங் ஆறு 4,350 கிலோமீட்டர் நீளம் கொண்ட உலகின் 12வது நீளமான நதியாகும். திபெத்திய பீடபூமியிலிருந்து இந்த நதி சீனாவின் யுனான் மாகாணம், பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் வழியாக செல்கிறது. இந்த ஆற்றில் பல வகையான மீன்கள் இருந்து வந்தது. சீனா இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டிய பிறகு மீகாங் டால்பின் மற்றும் மானடி உட்பட பல இனங்கள் அழிந்து வருகின்றன.
6. கங்கை ஆறு (Ganges):
2,510 கிலோமீட்டர் நீளம் கொண்ட கங்கை ஆறு மேற்கு இமயமலையில் இருந்து உருவாகிறது. வங்காள விரிகுடாவில் உள்ள சுந்தர்பான்ஸ் டெல்டா பகுதியில் கடலில் கலக்கிறது. இது நீண்ட காலமாக இந்துக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது. இந்து மதத்தில் கங்கா தெய்வமாக வழிபடப்படுகிறது. இது வரலாற்று ரீதியாகவும் முக்கியமானது. பல முன்னாள் தலைநகரங்கள் அதன் கரையில் அமைந்துள்ளன. கங்கைக் கரையில் அமைந்துள்ள வாரணாசி இந்து மதத்தின் புனித நகரமாக கருதப்படுகிறது. இந்துக்கள் இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கலக்கிறார்கள். கங்கையில் ஒரு முறையாவது குளிக்காமல் வாழ்க்கை முழுமையடையாது என்று பலரும் நம்புகிறார்கள்.
7. டான்யூப் ஆறு (Danube):
டானூப் ஆறு ஐரோப்பாவின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றாகும். இந்த நதி ரோமானியப் பேரரசின் நீண்டகால எல்லைகளில் ஒன்று. இன்று 10 ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளில் ஒரு பகுதியாக உள்ளது. இது ஜெர்மனியில் உள்ள பிளாக் ஃபாரஸ்டில் உருவாகி கிழக்கு நோக்கி சுமார் 2850 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து 4 தலைநகரங்கள் வழியாக சென்று கருங்கடலில் கலக்கிறது. 1992 இல் ஜெர்மன் ரைன்-மெயின்-டானூப் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆறு கருங்கடலில் இருந்து வட கடலில் உள்ள ரோட்டர்டாம் வரை டிரான்ஸ்-ஐரோப்பிய நீர்வழியின் ஒரு பகுதியாக உள்ளது.
8. யாங்சே நதி (Yangtze River):
உலகின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றான யாங்சே நதி சீனாவின் மிக நீளமான நதியாகும். கூடவே உலகின் மூன்றாவது நீளமான நதி. இந்த நதி சுமார் 6300 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. திபெத்திய பீடபூமியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பனிப்பாறையில் இருந்து உருவாகிறது. இது இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற யாங்சே பள்ளத்தாக்குகள் வழியாகச் சென்று கிழக்கு சீனக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் ஒன்றான த்ரீ கோர்ஜஸ் அணை உலகின் மிகப்பெரிய நீர் மின் நிலையமாகும்.
9. நைல் நதி (Nile River):
நைல் உலகின் மிக நீளமான நதி. இது கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய தரைக்கடல் வரை 6,650 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த நைல் நதிக்கு வெள்ளை நைல் நதி மற்றும் நீல நைல் நதி என இரண்டு முக்கிய துணை நதிகள் உள்ளன. வெள்ளை நைல் நதி மத்திய ஆப்பிரிக்காவின் கிரேட் லேக்ஸ் பகுதியில் ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் நீல நைல் நதி எத்தியோப்பியாவில் உள்ள டானா ஏரியில் தொடங்குகிறது. எகிப்திய நாகரிகத்தின் வளர்ச்சியில் நைல் நதி மிக முக்கியப் பங்காற்றியது. நைல் நதி பண்டைய எகிப்திய மக்களின் ஆன்மீக வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வந்துள்ளது. ஹாபி(Hapy) என்ற கடவுள் நைல் நதியின் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதாக பண்டைய எகிப்தியர்கள் கருதினர்.
10. அமேசான் நதி (Amazon River):
ஏறக்குறைய 6,400 கிலோமீட்டர் நீளம் கொண்ட அமேசான் நதி உலகின் இரண்டாவது நீளமான நதியாகும். இதன் நீளம் நைல் நதியை விட சற்றே குறைவாக உள்ளது. அமேசான் மற்றும் அதன் துணை நதிகள் பெரு, பொலிவியா, வெனிசுலா, கொலம்பியா, ஈக்வடார் மற்றும் பிரேசில் வழியாக பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. அமேசானில் 3,000 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மீன் இனங்கள் உள்ளன.மேலும் புதிய இனங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் நதி டால்பினின் முக்கிய வாழ்விடங்களில் ஒன்றாகும். இது ஆற்றில் வாழும் டால்பினின் மிகப்பெரிய இனமாகும். இது 8.5 அடி நீளம் வரை வளரக்கூடியது. பெருவில் உள்ள இக்விடோஸ் என்ற இடத்தில் அமேசான் ஆற்றில் புல் சுறா(bull shark) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் வசிக்கும் மற்றொரு ஆபத்தான மீன் பிரபலமான பிரன்ஹா(piranha) ஆகும். இதில் சில இனங்கள் மட்டுமே மனிதர்களைத் தாக்கும் என்று சொல்லப்படுகிறது.