கோடை காலத்தை சிறப்பாக சமாளித்து உங்களின் சரும அழகை பொலிவாக்க சந்தனம் உதவுவதாக அழகியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வெயில் காலம் வந்தவுடனே நாம் முதலில் கவனிக்கும் விஷயம் நமது சரும பாதுகாப்பு தான். சில நிமிடங்கள் வெளியில் சென்று வந்தாலே முகத்தின் பொலிவு முற்றிலுமாக மாறிவிட கூடும். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் தற்போது இருந்து வருகிறது. இந்த கோடை காலத்தை சிறப்பாக சமாளித்து உங்களின் சரும அழகை பொலிவாக்க சந்தானம் உதவுவதாக அழகியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சந்தனத்தை வைத்து பயன்படுத்த கூடிய ஃபேஸ் பேக் பற்றி இனி தெரிந்து கொள்வோம். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு முறை செய்து வந்தாலே உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கும்.
சந்தனத்தின் பயன்கள் :
சந்தனத்தை பொதுவாக சோப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்க பயன்படுத்துவார்கள். இது ஒரு இயற்கையான கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது மற்றும் சருமத்திற்கு முழு பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் இது வழி செய்கிறது. முக்கியமாக சூரிய ஒளியின் பாதிப்பை தணித்து சருமத்தை மென்மையாக வைக்கிறது. வறண்ட மற்றும் சுருக்கங்கள் கொண்ட சருமத்தை மீளுருவாக்கம் செய்கிறது.
எலுமிச்சை மற்றும் சந்தனம் ஃபேஸ் மாஸ்க் :
இது எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்களுக்கான சிறந்த ஃபேஸ் மாஸ்க் ஆகும். இதை தயார் செய்ய எலுமிச்சை சாறுடன் சிறிது சந்தன பொடியை கலந்து பேஸ்ட் போன்று ஆக்கி கொள்ளவும். பிறகு இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் முழுவதும் தடவி உலர விடவும். 15 நிமிடங்கள் கழித்து உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி செய்து வந்தால் சருமத்தில் சுரக்க கூடிய செபம் என்கிற முக்கிய மூலப்பொருளை உற்பத்தி செய்து முகத்தின் துளைகளை இறுக்கமாக்குகிறது.
தக்காளி மற்றும் சந்தனம் ஃபேஸ் பேக் :
இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்ய 1 டீஸ்பூன் வெள்ளரி சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 3 டீஸ்பூன் சந்தன பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மென்மையான பேஸ்ட் போன்று உருவாக்கவும். இதை முகத்தில் தடவி 25 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். முகத்தில் ஏற்பட்டுள்ள பலவித பாதிப்புகளை குணமாக்க இந்த ஃபேஸ் பேக் உதவும்.
வெள்ளரிக்காய் மற்றும் சந்தனம் ஃபேஸ் மாஸ்க் :
இதை தயாரிக்க 2 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது வெள்ளரிக்காய் சாறுடன் சம அளவு சந்தனப் பொடியைக் கலந்து கொள்ளவும். பிறகு இதை முகத்தின் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். சிறிது நேரம் உலர விட்டு, பின்னர் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் மூலம் உங்களுக்கு நீங்கள் உடனடி தீர்வுகள் கிடைக்கும்.