பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் செங்கோட்டை – கொல்லம் தினசரி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செங்கோட்டை – கொல்லம் இடையே முன்பதிவற்ற விரைவு சிறப்பு ரயில் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து காலை 11. 35 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.35 மணிக்கு கொல்லம் சென்று சேரும். அதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம் – செங்கோட்டை இடையேவும் இதேபோல் முன்பதிவற்ற விரைவு ரயில் சேவை கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. காலை 10.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 2.20 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.
இந்த ரயில்கள் பகவதிபுரம், தென்மலை, எடமன், புனலூர், அவனீஸ்வரம், எழுகோன், குண்டரா, கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதனை சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக இந்த ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை – கொல்லம் (வண்டி எண்: 06659) இடையே காலை 11.35 மணிக்கும், கொல்லம் – செங்கோட்டை (06660) இடையே காலை 10.20 மணிக்கும் புறப்படும் தினசரி சிறப்பு ரெயில் 16-ந் தேதி (இன்று) முதல் 21-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.