பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான தியாகி ருவன்பத்திரன தெரிவித்தார்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் ‘காணக்கிடைக்கவில்லை’ எனும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டவர்களின் குடும்ப மீள்வாழ்விற்காக ஒருமுறை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயைச் செலுத்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது.
அரசாங்கத்தின் குறித்த முடிவு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிடுவதாக சுட்டிக்காட்டினார்.
காணாமல்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுக்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது என ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் உறுதியளித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும் காணாமல்போனோரின் பெரும்பாலான குடும்பங்கள் மரண சான்றிதழையோ இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக அவர்கள் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையே எதிர்பார்க்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரையில் காணாமல்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்றிருக்கும் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை முடிவிற்குக் கொண்டுவருவதற்காக 25 விசாரணைக்குழுக்கள் நியமிக்க கடந்த வாரம் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.