சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.
நேற்றைய சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலை நடத்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதற்கமைவாக எதிர்வரும் மாதம் பேச்சு நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்கள பணிப்பாளர் Changyong Rhee இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விளக்கமளிப்பதே சந்திப்பின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.