சீனாவில் மீண்டும் தலைதூக்க தொடங்கிய கொரோனா

by Editor News

சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு சுமார் 3400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து தான் முதல் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. 2019 ஆண்டு டிசம்பர் மாதம் அங்கு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இந்தியா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட வைரஸின் உருமாற்றத்தின் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என அடுத்தடுத்து திரிபுகள் வந்துகொண்டே இருக்கின்றன. வைரஸ் பரவிய போது சிக்கலை சந்தித்த சீனா, கடும் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தியது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அங்கு குறைவான அளவே பாதிப்பு இருந்தது.

இதன் காரணமாகவே சீனா கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 3,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

19 மாகாணங்களில் ஓமிக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா தொற்று ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஷாங்காயில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிலின் நகரத்தில் பகுதியளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடக்கூடிய நூற்றுக்கணக்கான சுற்றுப்புறங்கள் மூடப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment