ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஏற்கனவே 3 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று 4வது கட்டமாக இரு நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா போர் நடத்தி வருகிறது. 24ம் தேதி தொடங்கிய போர் இன்று 15வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர ஏற்கனவே இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெலாரஸ் நாட்டில் இதுவரை நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இருப்பினும் 3வது கட்ட பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாக ரஷ்ய அதிகாரி தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே உக்ரைனில் இருந்த லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறியுள்ளனர். உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் இதுவரை 37 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. பல குழந்தைகள் காயமடைந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவரும்படி பல்வேறு நாடுகளும் ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றன. அந்தவகையில் பிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷியா சில இடங்களில் போரை நிறுத்ததுவதாக அறிவித்தது.
இந்நிலையில் நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனை இணைத்துக்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், நேட்டோவுடன் இணையும் ஆர்வம் குறைந்துவிட்டதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும் புதினுடன் நேரடியாக பேசினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்றும் உக்ரைன் அதிபர் கூறியிருந்தார். இதன்மூலம் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படும் என்று கூறப்பட்டது.