உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை வகித்து வருவதால், பாஜக அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என தெரிகிறது
70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் 57 தொகுதிகளில் பா.ஜ.க வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.அதேபோன்றதொரு இந்த தேர்தலிலும் வெற்றியைப் பெறவேண்டும் என்று பா.ஜ.க தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக உத்தரகாண்ட்டில் வாக்குப் பதிவு நடைபெற்றது. பா.ஜ.க எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸும் தீவிரமாக பணியாற்றியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணியே பெரும்பான்மையுடன் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என தெரிவித்தன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பாஜக மற்று காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் போக போக காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலையில் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதாவது 70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில்36 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்க முடியும், இந்நிலையில், பாஜக 44 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 22 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று பின் தங்கியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.