இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் 4 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. முதல் அலை, இரண்டாம் அலையை காட்டிலும் 3ஆம் அலையில், தொற்று பாதிப்பு என்பது வெகுவாக குறைந்தே உள்ளது. இருப்பினும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாகவே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் 4,362 பேர், நேற்று 3,993 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 145 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று 108 பேர் பலியாகிய நிலையில் இறப்பு எண்ணிக்கையும் சற்று உயர்ந்தே காணப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,15,355 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,24,13,566 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 49,962 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதேபோல் இதுவரை 179.33 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.