உக்ரைனின் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி நகரங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வசதியாக அங்கு தற்காலிக போர் நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவுத்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையிலான போர் 12-வது நாளை எட்டியுள்ளது. ரஷ்யா தனது எல்லைப் பகுதியிலுள்ள உக்ரைன் நகரங்கள் பலவற்றை கைப்பற்றியுள்ளன. மேலும் உக்ரைனுக்கு சொந்தமான விமான நிலையங்கள், அணுமின் நிலையம், முக்கிய ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவற்றையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதல் காரணமாக உக்ரைனில் உணவு, மருந்து உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் மக்கள் வெளியேறுவதற்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி நகரங்களில் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அந்த நகரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள வசதியாகவும் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கோரிக்கையை ஏற்று, மனிதாபிமான முறையில் போர் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள சுமி நகரில் 700 இந்திய மாணவர்கள் சிக்கித்தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா – உக்ரைன் பிரதிநிதிகள் இடையிலான 3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.