உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் விளாதிமர் ஜெலன்ஸ்கி உடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று பிற்பகலில் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைய முயற்சித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. 11 நாட்களுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால் இருநாட்டு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் உக்ரைனில் வசிக்கும் வெளிநாட்டவர்களை சம்பந்தப்பட்ட நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகிறது. உக்ரைனில் வசிக்கும் மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதுவரை சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேபோல் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை இந்திய விமானப்படை விமானம் மூலம் அண்டை நாடுகள் வழியாக மத்திய அரசு மீட்டு வருகிறது. ஆப்ரேஷன் கங்கா மூலம் இதுவரை 76 விமானங்கள் மூலம் 15 ஆயிரத்து 920 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் விளாதிமர் ஜெலன்ஸ்கி உடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று பிற்பகலில் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே போர் தொடங்கிய போது பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐ.நா. சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதேபோல் ரஷ்ய அதிபரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ரஷ்ய எல்லைகள் வழியாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ரஷ்யா இந்திய மாணவர்களை பேருந்து மூலம் மீட்டு விமானம் மூலம் அனுப்பி வைத்தது. இந்த நிலையில் இருநாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசவுள்ளாது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.