மழைக் காலமானது ஆரம்பித்துவிட்டது. அனைவரும் பொழியும் மழையில் நனைந்து ஒரே சந்தோஷத்துடன் இருப்போம். அந்த சந்தோஷத்தில் வீட்டில் வளர்க்கும் செடிகளை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம். ஏனெனில் எப்படி நமக்கு மழை வந்தால் சந்தோஷமோ, அதேப் போல் செடிகளும் குதூகலத்துடன் இருக்கும். பொதுவாகவே செடிகள் நன்கு செழிப்புடன் வளர்வதற்கு நீரானது மிகவும் இன்றியமையாதது. அதிலும் மழைநீர் மிகவும் சிறந்தது. ஏனெனில் மழை நீர் மிகவும் சுத்தமான நீர்.
எனவே மழைநீரை செடிகளுக்கு ஊற்றி, செடிகள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதே சமயம் மழைநீராலும் செடிகளுக்கு அழிவு நேரிடக்கூடும். எனவே இப்போது மழைநீரை செடிகளுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்கள்.
* மாசடைந்திருக்கும் நகரத்தில் இருந்தால், முதல் மழையில் செடிகள் நனையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த மாதிரியான இடத்தில் பொழியும் மழையானது காற்றில் உள்ள அனைத்து மாசுக்களையும் வெளியேற்றும். இதனால் அந்த மழையானது செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.
* தொட்டியில் செடிகளை வளர்த்தால், மழை லேசாக பொழியும் போது, அவற்றை மழைப் பொழியும் இடங்களில் வைத்தால், செடிகளின் இலைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி, செடியை பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் வெளிப்படுத்தும்.
* ஒருவேளை மழையானது ஜோராக பொழிந்தால், அப்போது அதனை வெளியே வைக்க வேண்டாம். இல்லையெனில் மழையின் வேகமானது, செடிக்கு அழிவை ஏற்படுத்தும். மேலும் காற்று அதிகம் இருக்கும் போதும், செடிகளை பத்திரமாக வீட்டின் உள்ளே வைக்க வேண்டும்.
* வேண்டுமெனில் வேகமாக மழைப் பொழியும் போது, அந்த நீரை சேகரித்து வைத்து, செடிகளுக்கு ஊற்றலாம். அதிலும் ஒரு வாளியை மழைப்பொழியும் இடத்தில் வைத்து சேகரிக்கலாம். இவ்வாறு சேகரிக்கும் நீரை செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் நன்கு வலுவோடும், ஆரோக்கியமாகவும் வளரும். ஏனெனில் மழைநீர் என்பது மிகவும் தூய்மையான நீர் மற்றும் எங்கும் கிடைக்காதது.