ஷேன் வார்ன் vs சச்சின் டெண்டுல்கர்- லஷ்மண் பகிர்ந்த மெமரி

by Column Editor

உலகின் சிலபல கிரிக்கெட் மோதல்களில் புகழ்பெற்ற வரிசையில் ஷேன் வார்ன் பவுலிங் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் என்பது ரசிகர்களால் பெரிதும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் கொண்டாடப்பட்ட ஒன்று.

உலகின் சிலபல கிரிக்கெட் மோதல்களில் புகழ்பெற்ற வரிசையில் ஷேன் வார்ன் பவுலிங் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் என்பது ரசிகர்களால் பெரிதும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் கொண்டாடப்பட்ட ஒன்று.

குறிப்பாக 1998-ம் ஆண்டு சென்னையில் மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஷேன் வார்ன் நம்மை பயங்கரமாக அச்சுறுத்துவார், அதுவும் நல்ல பிட்சிலேயே பெரிய அளவில் பவுலிங் செய்யும், பந்துகளை கடுமையாகத் திருப்பும் ஷேன் வார்ன், நம்மூர் குழிப்பிட்சில் நம்மை படுத்தி எடுத்துவிடுவார் என்று சச்சின் டெண்டுல்கருக்கு தெரிந்திருந்தது.

அதனால் அந்தத் தொடருக்கு முன்பே மும்பையிலும் சரி, சென்னை எம்.ஆர்.எப் வேகப்பந்து அகாடமியிலும் சரி சச்சின் பயிற்சியில் இறங்கினார், என்ன மாதிரி பயிற்சி எனில், பிட்சில் லெக் சைடில் பவுலர்களின் காலடித்தடம் போன்ற ஒன்றை வேண்டுமென்றே உருவாக்கி அங்கு ரவி சாஸ்திரி முதல், எல்.சிவராம கிருஷ்ணன் வரை வந்து சச்சினுக்கு வீச வேண்டும், அதே போல் ஷேன் வார்ன் திருப்பும் பந்தின் திசைக்கேற்ப அந்தத் திசையிலிருந்து தன் மட்டைக்கு நேராக த்ரோ செய்யச் செய்தும் கடும் பயிற்சி மேற்கொண்டார் சச்சின்.

ஆனால் சென்னையில் அந்த டெஸ்ட் போட்டியில், ஷேன் வார்ன் லெக் ஸ்டம்பில் குத்தி ஒரு பந்தை திருப்ப சச்சின் அதை பந்து திரும்பும் திசைக்கு எதிர்த்திசையில் மிட் ஆன் மேல் தூக்கி அடிக்க முயன்றார் ஆனால் எட்ஜ் ஆகி கல்லியில் கேட்ச் ஆனது. சச்சின் 4 ரன்களில் அவுட், சென்னை ரசிகர்கல் கப்சிப். இந்தியா 257 ரன்களுக்கு ஆல் அவுட் வார்ன் 4 விக்கெட். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 328 ரன்கள். அனில் கும்ப்ளே 4 விக்கெட்.

71 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றிருந்தது, அப்போதுதான் 2வது இன்னிங்சில் 115/2 என்று இறங்கினார் சச்சின், ஷேன் வார்ன் தன் வாழ்நாளில் அது போன்ற ஒரு அடியை பார்த்திருக்க மாட்டார். ஷேன் வார்னை இனிமே என் விக்கெட்டை எடுப்பாயா என்று கேட்பது போல் அடித்து நொறுக்கினார். மூன்றரை மணி நேரங்களில் 191 பந்துகளில் 155 ரன்களை விளாசினார். 14 பவுண்டரிகள் 4 சிக்சர்கள். இந்தியா 418/4 டிக்ளேர். ஷேன் வார்ன் 30 ஓவர் 122 ரன்கள் 1 விக்கெட். ஆஸ்திரேலியாவுக்கு 348 ரன்கள் இலக்கு ஆனால், 168 ரன்களுக்கு சுருண்டது. கும்ப்ளே 4, ராஜேஷ் சவுகான் 3, வெங்கடபதி ராஜு 3. ஆட்ட நாயகன் சச்சின் டெண்டுல்கர்.

இந்தப் போட்டி பற்றி லஷ்மண் ஒரு முறை குறிப்பிட்ட போது, ‘சச்சின் டெண்டுல்கர் முதல் இன்னிங்சில் அவுட் ஆன போது ஒரு மணி நேரம் ஆளைக்காணோம், பிறகு வந்தார் ஆனால் கண்கள் கலங்கியிருந்தன, அவர் தான் அவுட் ஆனதை நினைத்து அழுதிருக்கலாம், ஆனால் அதன் பிறகு அவர் ஆடிய இன்னிங்ஸ் ஆல் டைம் கிரேட்.’ என்றார்.

அதுமட்டுமல்ல, ஷேன் வார்ன் பவுலிங்கை அதன் பிறகு எல்லா விதங்களிலும் ஆடிக்காட்டினார் சச்சின் டெண்டுல்கர், டவுன் த டிராக், சாதாரண ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப், பெடல் ஷாட், கட் ஷாட், புல் ஷாட் கவர் ட்ரைவ் என்று எல்லா ஷாட்களையும் ஆடிவிட்டார். ஷேன் வார்னே ஒருமுறை கூறும்போது, இரவு கண்களை மூடினால் சச்சிண்டெண்டுல்கர் இறங்கி வந்து என் பந்தை அடிக்கும் காட்சியே திரும்பத் திரும்ப வந்து என்னை அச்சுறுத்துகிறது, என்றார்.

Related Posts

Leave a Comment