இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டி விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் விராட் கோலி, 45 ரன்கள் எடுத்திருந்த போது எம்புல்டேனியா பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த போட்டியில் 45 ரன்கள் எடுத்ததன் மூலம் விராட் கோலி 8000 ரன்களை கடந்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதிய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல், டிராவிட், சுனில் கவாஸ்கர், ஷேவாக், விவிஎஸ் லட்சுமணன் உள்ளிட்டோர் டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்தவர்கள் ஆவர்.
தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி அரைசதம் அடித்தார். பின்னர் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கை பந்துவீச்சாளர் விஷ்வா ஃபெர்னாண்டோ பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.