இறுதித் தேர்வுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரிவர இயங்கவில்லை. கொரோனா குறைய தொடங்கியதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்த தொடங்கின. இதையடுத்து டிசம்பர் மாத இறுதியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது . இதையடுத்து பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் 10 ,11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் மே 28ம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்புகளுக்குதேர்வானது மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும் , பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 6-ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவு ஜூன் 23ம் தேதியும் ,பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவு ஜூலை 7ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவு ஜூன் 17ஆம் தேதியும் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது . 6 முதல் 9 வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வானது மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மே 30ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வு மே 2ம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாள் மே 13 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வியாண்டு ஜூன் 16-ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 11ஆம் வகுப்புக்கு மட்டும் ஜூன் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.