உக்ரைன் ரஷ்யா போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தகைய சிக்கலான சூழலில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளனர். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் தான் ரஷ்ய தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு இருக்கும் இந்தியர்கள் சுரங்கத்தில் அமைந்திருக்கும் மெட்ரோ ரயில்களிலும் சுரங்கப்பாதைகளிலும் பதுங்கியுள்ளனர். அவர்களுக்கு அடுத்த வேளை உணவு கிடைப்பதில் கூட கடும் சிக்கல் எழுந்துள்ளது. தங்களை எப்படியாவது காப்பாற்றுமாறு வீடியோ கால்களில் கதறுகின்றனர்.
இதனால் ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரிக்கு இந்தியர்களை வரவழைத்து அங்கிருந்து மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர். முதற்கட்டமாக ஐந்து விமானங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்த மீட்பு பணி நடந்துகொண்டிருந்த போதே நேற்று உக்ரைன் எல்லையைக் கடக்க முயன்ற இந்திய மாணவர்களை அந்நாட்டு ராணுவத்தினர் அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியானது.
இதையடுத்து அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ஹர்தீப் பூரி, சிந்தியா, கிரண் ரிஜிஜூ, விகே சிங் ஆகிய நான்கு அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை மீட்கும் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனிடையே உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான அமைதி பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தலைநகர் கீவ்வில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வர உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கீவ்விலிருந்து இந்தியர்களை அழைத்துவர இந்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள உக்ரைனிலுள்ள இந்திய தூதரகம், “கீவ் நகரில் வார இறுதியை முன்னிட்டு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் மேற்குப் பகுதிகளுக்குச் செல்ல இந்திய மாணவர்கள் ரயில் நிலையங்களுக்கு வர வேண்டும். உக்ரைன் ரயில்வே இந்திய மாணவர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கீவ் நகரில் மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.