ஐபிஎல் கிரிக்கெட்டில் ராசியில்லாத ராஜா ஆர்சிபி என்றால், ராசியில்லாத ராணி நடிகை பிரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் அணி தான். வருடா வருடம் அணி வீரர்களை மொத்தமாக மாற்றினாலும் அந்த அணி பார்டரில் கூட பாஸ் ஆவதில்லை. அதாவது முதல் நான்கு இடங்களைக் கூட பிடிப்பதில்லை. மாறாக கடைசி இரண்டு இடத்தை யார் பிடிப்பது என போட்டோ போட்டி போட்டுக் கொண்டிருக்கும். கடந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து பார்த்தது. அதாவது அணியின் பெயரையே மாற்றியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்று இருந்ததை பஞ்சாப் கிங்ஸ் என்று மாற்றினார்கள்.
ஆனால் அதுவும் பலன் கொடுக்கவில்லை. கடைசி இடத்துக்கு தான் பஞ்சாப் போட்டி போட்டது. இச்சூழலில் இந்த ஐபிஎல் சீசனில் எப்படியாவது கப் அடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் மொத்த பேரையும் கழற்றிவிட்டு பிரஷ்ஷான வீரர்களை எடுக்க ஏலத்தில் ஆர்வம் காட்டியது. மயங்க் அகர்வால் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகிய இருவரை மட்டுமே தக்கவைத்தது. கேஎல் ராகுலை லக்னோ புக் செய்துவிட்டதால் வேறு வழியின்றி அவரைக் கைகழுவி விடும் சூழலுக்கு பஞ்சாப் தள்ளப்பட்டது. ராகுல் போய்விட்டதால் முக்கியமான ஓபனரை தட்டி தூக்க நினைத்து ஆரம்பத்திலேயே ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு வளைத்துப் போட்டது.
அதற்குப் பின்னர் முன்னணி பந்துவீச்சாளரான ரபாடாவையும் ரூ.9.25 கோடிக்கு தட்டித்தூக்கியது. பெயர்ஸ்டோ, தமிழக வீரர் ஷாருக்கான், லியாம் லிவிங்ஸ்டன், ஓடியன் ஸ்மித், ஹர்பிரீத் பிரார், ராகுல் சஹர் என ஸ்டார் பிளேயர்களை இம்முறை ஏலத்தில் எடுத்துள்ளது. ஆகவே பஞ்சாப் அணி சற்று வலுவான அணியாகவே இருக்கிறது. இச்சூழலில் ராகுல் போய்விட்டதால் யாருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மயங்க் அகர்வாலுக்கா, தவானுக்கா என்ற போட்டியில் அகர்வால் வெற்றிபெற்றுள்ளார்.
அவரை கேப்டனாக அறிவித்துள்ளது அணி நிர்வாகம். அகர்வால் இதுவரை கேப்டன் பொறுப்பை வகித்ததில்லை. ஆனால் தவான் இந்திய அணி, டெல்லி, ஹைதராபாத்துக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். தவானை விட்டு அகர்வாலை டிக் அடித்துள்ளது பஞ்சாப். கர்நாடகாவைச் சேர்ந்த அகர்வால் 2018ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணியில் இடம்பெற்று அதிக ரன்களைக் குவித்து வருகிறார். ஒவ்வொரு சீசனிலும் அணிக்கு முக்கியவத்துவம் வாய்ந்த வீரராக இருப்பது கவனிக்கத்தக்கது. அந்த அடிப்படையிலேயே கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.