உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றோடு ஐந்தாவது நாளாகிறது. ஆனாலும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. தொய்வின்றி நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷ்யா தலைநகர் கீவ்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முனைப்பு காட்டி வருகிறது. கீவ்வை கைப்பற்றிவிட்டால் உக்ரைனுக்கு கடிவாளம் போடலாம் என்று எண்ணுகிறது ரஷ்யா. ரஷ்யா எவ்வளவு அச்சுறுத்தினாலும் எதிர்த்து போராடுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சூளுரைத்துள்ளார். மக்களையும் ஆயுதங்கள் தாங்கி போரிட அழைப்பு விடுத்துள்ளார். இதனால் போர் இப்போதைக்கு முடியும் சூழல் ஏற்படவில்லை.
இருப்பினு போரை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நேரடியாக போரில் ஈடுபடாவிட்டாலும் உக்ரைன் போரிட தேவையான ஆயுதங்கள், விமானங்கள் என அனைத்து ராணுவ உதவிகளையும் செய்து வருகின்றனர். அதேபோல பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால் முழுமூச்சுடன் தீர்க்கமாக எதிர்ப்பது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தான். அமெரிக்கா சில நாட்களுக்கு முன் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது.
இந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் கொண்டு ரஷ்யா தோல்வியடைய செய்தது. வீட்டோ என்றால் ஒரு தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரித்தாலும் கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக உள்ள நாடு எதிராக வாக்களித்தால் அது செல்லாது. இதில் சீனா, இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன. அப்போதே இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. இச்சூழலில் இன்று ஐநா பொதுச்சபை அவசரக் கூட்டம் நடைபெற்றது. உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து போர் விவகாரத்தை விவாதிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனை வழக்கம் போல இந்தியா புறக்கணித்தது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, “இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர வேண்டும். அது தான் இந்தியாவின் நிலைப்பாடு. எங்கள் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரிடம் இதைத் தான் வலியுறுத்தியுள்ளார். இப்போதைக்கு உக்ரைனில் ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதே எங்களின் தலையாய பணி. எல்லையைத் தாண்டுவதில் பல்வேறு சிக்கல் நிலவுவதால் இந்தியர்கள் குறிப்பாக பெருமளவிலான மாணவர்களின் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாங்கள் இத்தருணத்தில் வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கிறோம்” என்றார்.