கேண்டலிம் பீச் எப்போதுமே பரபரப்புக்கும், அமைதிக்கும் இடைப்பட்ட ஓர் இடமாகவே கொள்ளப்படுகிறது. இந்த பீச் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே உள்ளது. ஆனால் இந்தக் கடற்கரையில் ஆங்காங்கு மணற்குன்றுகள் காணப்படுவதால் நடந்து செல்வதற்கு கடினமாக இருக்கும். அதோடு இங்கு ஒரு சில குடில்களையும், உணவகங்களையும் நீங்கள் பார்க்கலாம். இருந்தாலும் அவைகளும் கூட கடற்கரையிலிருந்து சற்று தூரம் நடந்து சென்றால் தான் காண முடியும்.
கேண்டலிம் பீச்சில் 12 வருடங்களாக தரைதட்டி நிற்கும் ரிவர் பிரின்சஸ் என்ற கப்பல் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். என்னதான் இந்தக் கடற்கரை நடப்பதற்கு ஏதுவாக இல்லாமலும், குடில்களற்று காணப்பட்டாலும், ஆங்காங்கு பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் மணற்குன்றுகள், கடற்கரையில் காலடி எடுத்து வைக்கும் எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் தனித்துவமான அழகு படைத்தவை.
கேண்டலிம் பீச் பார்டேஸ் பேருந்து நிலையத்துக்கு வெகு அருகில்தான் அமைந்திருக்கிறது. அதேபோல் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனாஜியிலிருந்து வாடகை கார்கள் மூலம் சுலபமாக கேண்டலிம் பீச்சை அடைந்து விடலாம்.