இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 1,329 புள்ளிகள் உயர்ந்தது.
ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகள் விதித்துள்ளபோதிலும், அதில் ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்கும் அல்லது ரஷ்யாவை எஸ்.டபிள்யு.ஐ.எப்.டி. செய்தியிடல் அமைப்பிலிருந்து அகற்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் நிலைமை சீராக இருப்பது பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக இருந்தது. மேலும், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் நெஸ்லே இந்தியா மற்றம் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவற்றை தவிர்த்து மற்ற 28 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,637 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 733 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 84 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.249.99 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.7.68 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,328.61 புள்ளிகள் உயர்ந்து 55,858.52 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 410.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,658.40 புள்ளிகளில் முடிவுற்றது.