10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன. பொதுத்தேர்வுகளும் முறையாக நடத்தப்படாமல் இருந்தது. மேலும் நடப்பாண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது. 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகையால் இந்தாண்டு பொதுத்தேர்வை நடத்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் கடந்த 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாகவும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும்படி, ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. அவ்வப்போது திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டன. அந்தவகையில் அண்மையில் நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வில் அடுத்தடுத்து , முன்கூட்டியே வினாத்தாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும், பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும்படியும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று மாலை 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சரியாக மாலை 4 மணிக்கு பொதுத்தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணை வெளியாகவுள்ளது.