ஊடகவியலாளர் ம. நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் ஒருவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக யுத்தக் குற்றங்களை விசாரிக்கும் பெருநகர பொலிஸ் பிரிவு (Met’s War Crimes team) தெரிவித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில், ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலையின் பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்ட ஒருவர், பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது வெளிநாட்டில் தலைமறைவானார்.
இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான கொலை விசாரணையின் ஒரு பகுதியாக பெருநகர காவற்துறையின் யுத்த குற்றம் தொடர்பான விசாரணைப் பிரிவும் (Met’s War CrimesTeam), பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு (Counter Terrorism Command) அகியன இணைந்து 48 வயதான இவரை இநகிலாந்தின் Northamptonshire பகுதியில் கடந்த 22 ஆம் திகதி (22.02.22) கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் 2001 – 51 ஆவது பிரிகு சட்டத்தின் கீழ் கைதான இவர் விசாரணையின் கீள் விடுவிக்கப்பட்டுள்ளார்
இதேவேளை 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக Met’s War Crimes Team, பொதுமக்களிடம் தகவல்களைக் கோரியுள்ளது.
2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இந்தக் கைது குறித்து, நிமலராஜனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்கு விசேட விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
விசாரணைகள் தொடர்கின்றன, மேலும் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டிருக்கும் எவரிடமிருந்தும் தகவல்களை பேற்றுக்கொள்ள அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் – குறிப்பாக இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து இப்போது வசிக்கும் இலங்கை சமூகத்தினரிடம் இருந்து இந்த தகவல்களை எதிர்பார்ப்பதாக, Met இன் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளை பிரிவிற்கு தலைமை தாங்கும் கொமாண்டர் ரிச்சர்ட் ஸ்மித் (Commander Richard Smith) கூறியுள்ளார்.
“குறிப்பாக நிமலராஜனின் கொலை தொடர்பாக இன்னும் சிலருக்கு தகவல்கள் இருக்கலாம், மேலும் நிமலராஜனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க முன்வருமாறு அந்த மக்களை தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவலை வழங்க, போர் குற்றங்கள் குழுவிற்கு நேரடியாக SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பமுடியும்.
+ Met Police War Crimes Unit ஆனது Met Police பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைப்பிரிவின் ஒரு பகுதியாகும். பிரித்தானியாவின் அதிகார வரம்பிற்குள் வரக்கூடிய மற்றும் உலகில் எங்கும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை அல்லது சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரித்து நீதிக்கு கொண்டு வருவதற்கு இது உறுதிபூண்டுள்ளது. இந்த அணுகுமுறை யுத்தக் குற்றவாளிகளுக்கு ‘பாதுகாப்பான புகலிடமில்லை’ என்ற பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது.
இத்தகைய விசாரணைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் அத்துடன் வெளிநாட்டிலிருந்து ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், எனவே அவை மிகவும் சிக்கலானதாகவும் நீண்டதாகவும் இருக்கும்.
குறிப்பிடப்பட்ட அனைத்து போர்க் குற்றச் சாட்டுகளும் போர்க்குற்றங்கள்/மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பரிந்துரை வழிகாட்டுதல்களின்படி பரிசீலிக்கப்பட்டு, மதிப்பிடப்பட்டு போர்க் குற்றங்கள் குழுவினால் கையாளப்படுகின்றன.
போர்க் குற்றங்கள் குழு என்பது பிரித்தானிய போர்க் குற்ற வலையமைப்பின் ஒரு பகுதியாகும், இதில் வெளிநாட்டு, கொமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகம், முடிக்குரிய சட்டவாக்க சேசை, பிற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உட்பட பல முக்கிய அமைப்புகளை உள்ளடக்கியது. போர்க் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக பிரித்தானியா ஒருபோதும் இருப்பதில்லை இந்தக் கைது உறுதிப்படுத்துவதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும், வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள், பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொண்டது.
அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும் ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன் மூவரை குற்றவாளிகளாக இனம் கண்டு தீர்பளித்தார். தலைமறைவாகிய இவர்களில் சிலருக்கும் நிமலராஜனின் கொலையுடன் தொடர்பிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த மூவருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் காவல்துறை மா அதிபர் திணைக்களம் ஆகிய இணைந்து இந்தக் குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.