உக்ரைனின் ஒரு பெரும்பகுதியை சுதந்தரம் பெற்றதாக புடின் அறிவித்துள்ளார். இது அற்புதமானது. அவர் ஒரு மேதை. எனக்கு புடினை நன்றாக தெரியும். அவருக்கு என்னை பிடிக்கும் எனக்கும் அவரை பிடிக்கும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மேதை என பாராட்டியுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. தற்போது மீண்டும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தை குவித்து வருகிறது. இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள டோன்ஸ்டெக் மற்றும் லஹன்ஸ்சக் ஆகிய கிளர்ச்சியாளர்களால் ஆளும் பகுதிகளை சுதந்தரம் பெற்ற பகுதிகளை ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் அறிவித்தார். உக்ரைனின் உள்விவகாரங்களில் ரஷ்யா தலையிட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால், அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினின் இந்த நடவடிக்கையை புத்திசாலித்தனமானது என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ” உக்ரைனின் ஒரு பெரும்பகுதியை சுதந்தரம் பெற்றதாக புடின் அறிவித்துள்ளார். இது அற்புதமானது. அவர் ஒரு மேதை.. அவர் உள்ளே சென்று அமைதி ஏற்படுத்துபவராக இருக்க போகிறார்.
அதுதான் வலிமையான அமைதிப் படை… அதை நாம் நமது தெற்கு எல்லையில் பயன்படுத்தலாம். அதுதான் நான் பார்த்ததிலேயே வலிமையான அமைதிப் படை. நான் பார்த்ததை விட அதிகமான இராணுவ டாங்கிகள் இருந்தன. அவர்கள் அமைதியை நிலைநாட்டப் போகிறார்கள். அவர் மிகவும் அறிவாளி’ என்று டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், எனக்கு புடினை நன்றாக தெரியும். நான் அவருடன் நன்றாகப் பழகினேன். அவர் என்னை விரும்பினார். நான் அவரை விரும்பினேன், என்று கூறிய டிரம்ப் புடின் சிறந்த வசீகரம் மற்றும் நிறைய பெருமைகளை பெற்றுள்ளார். அவர் தனது நாட்டை நேசிக்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்தார்.