தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப் 1 , குரூப் 2 மற்றும் 2ஏ , குரூப் 4, விஏஓ மற்றும் குரூப் 5,6,7,8 என பல்வேறு படிநிலைகளுக்கேற்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ் சி தேர்வுகள் நடத்தப்படவில்லை. நடப்பாண்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இச்சூழலில் கடந்த 18ஆம் தேதி இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.அதன்படி குரூப் 2 பணிக்கு 116 பணியிடங்களுக்கும் மற்றும் குரூப் 2ஏ பணிக்கு 5412 பணியிடக்களுக்கான தேர்வு மே மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என கூறினார். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 23ஆம் தேதி, அதாவது இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்திருந்தார். தற்போது இதற்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.
அதில், குரூப் 2 பிரிவில் இந்த முறை காவல்துறை பிரிவின் கீழ் சிறப்பு பிரிவு அதிகாரிக்கான பதவி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தாததால் இந்த முறை வயது வரம்பை 32ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23ஆம் தேதி என்றும் இன்று முதல் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்து தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழில் எழுத விரும்புபவர்களுக்கு தமிழில் 100 கேள்விகள், ஆப்டியூட் டெஸ்ட் 25 , பொது அறிவியல் 75 என 200 கேள்விகள் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதேபோல ஆங்கிலத்தில் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு ஆங்கிலத்தில் 100 கேள்விகள் இடம்பெறும். 90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படும்.