சாப்பிடும் உணவுடன் தவறாமல் ருசிக்கும் ஊறுகாயை குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அதுதான் தேவையற்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதன் காரத்தன்மை, சுவை காரணமாக வெறுமனே ஊறுகாயை ருசிப்பவர்களும் இருக்கிறார்கள். மாங்காய், எலுமிச்சை, நார்த்தை, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன், கோழி என விதவிதமான வகைகளில் ஊறுகாய் தயார் செய்யப்படுகிறது. அதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஊறுகாய்க்கு கூடுதல் சுவையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
ஊறுகாயில் சேர்க்கப்படும் பொருட்கள் நொதித்தல் முறையில் ஒன்றோடு ஒன்று கலந்து ருசி சேர்க்கின்றன. இத்தகைய நொதித்தல் தன்மை குடலுக்கு ஆரோக்கியமானது. எனினும் ஊறுகாயில் உப்பும், எண்ணெய்யும் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. அவை ஊறுகாயில் பூஞ்சை தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக கலக்கப்படுகின்றன. ஆனாலும் உப்பில் இருக்கும் அதிகப்படியான சோடியம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. பொதுவாகவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் இதயத்திற்கு கேடு விளைவிக்கும். உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யும். எண்ணெய்யில் ஹைட்ரோஜனேட் உள்ளிட்ட மோசமான கொழுப்புகளும் கலந்திருக்கின்றன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
‘‘எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் டிரான்ஸ் கொழுப்பு இதய நோய், உடல் பருமன் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பும் உடலுக்கு தீங்குவிளைவிக்கும். உயர் ரத்த அழுத்தம், வீக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் ஊறுகாயில் கலக்கப்படும் மசாலா பொருட்கள் செரிமான அமைப்பை எரிச்சலூட்டும். தரமில்லாத எண்ணெய் ஊறுகாயில் கலக்கப்பட்டால் அதிலிருக்கும் டிரான்ஸ் கொழுப்புகள் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்’’ என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா. உடலுக்கு ஆரோக் கியம் சேர்க்கும் ஊறுகாயை தயாரிக்கும் விதத்தையும் விளக்குகிறார்.
‘‘கடுகு எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களை சரியான விகிதத்தில் கலந்து ஊறுகாய் தயார் செய்தால் அது குடலுக்கு நலம் சேர்க்கும். ஊறுகாய் தயாரிப்புக்கு சேர்க்கப்படும் பொருட்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். நொதித்தலும் சரியான வழிமுறையில் நடைபெற வேண்டும். எனினும் ஊறுகாயை குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அதுதான் தேவையற்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க உதவும்’’ என்கிறார்.