கார்களில் உள்ள சீட்களின் மீது நாம் குழந்தைகளுக்கான பிரத்யேக சீட்களை கிளிப் பயன்படுத்தி மாட்டிக் கொள்வதைப் போன்றே, விமானங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் .
விமானங்களில் குழந்தைகளுக்கான பிரத்யேக சீட்டிங் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று இந்திய விமானப் போக்குவரத்து ஆணையரகம் (DGCA) அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு, டிஜிசிஏ அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில், “பயணிகள் பயன்படுத்திக் கொள்வதற்கான ‘child restraint systems’ என்ற குழந்தைகளுக்கான பிரத்யேக சீட்டிங் வசதிகளை வாய்ப்புள்ள இடங்களில் செய்து கொடுக்க வேண்டும். குழந்தைகள் அல்லது குறிப்பிட்ட வயது உடைய குழந்தைகளுடன் பயணிக்கும் மக்கள் அதை பயன்படுத்திக் கொள்வார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான சீட்டிங் வசதியை மேம்படுத்தும், தொடர்புடைய கொள்கைகளை வகுப்பது, நடைமுறைகள், பயிற்சிகள் வழங்குவது, நிலையான இயக்க வழிகாட்டுதல்கள் போன்ற நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் அவர்களாகவே மேற்கொள்ளலாம்.
பயணிகளுக்கு இந்த வசதி கிடைப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள அகலமான பயணிகள் சீட் குறித்த விவரங்களை விமான நிறுவனங்கள் அவர்களது இணையதளத்தில் வெளியிடலாம். அதேபோன்று, விமானத்தை தரையில் நகர்த்தும்போதும், பறக்க இருக்கும் சமயங்களிலும், தரையிறங்கும் சமயங்களிலும் இந்த குழந்தைகளுக்கான சீட் பயன்பாட்டை விமான நிறுவனங்கள் தடை செய்யலாம்.
கார்களில் உள்ள சீட்களின் மீது நாம் குழந்தைகளுக்கான பிரத்யேக சீட்களை கிளிப் பயன்படுத்தி மாட்டிக் கொள்வதைப் போன்றே, விமானங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேலிகட் பகுதியில் நடைபெற்ற விபத்து தொடர்பாக ஆய்வு செய்து வரும் டிஜிசிஏ அமைப்பின் துணைக் குழு தெரிவித்த ஆலோசனைகளின் அடிப்படையில், குழந்தைகளுக்கான பிரத்யேக சீட் பயன்பாடு குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விபத்து நடந்த விமானத்தில் 10 குழந்தைகள் பயணித்தனர். அவர்களுக்கான பிரத்யேக சீட் வசதி இல்லை என்ற காரணத்தால் 3 குழந்தைகள் உயிரிழக்க நேரிட்டது. மேலும் 3 குழந்தைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. எஞ்சியுள்ள 4 குழந்தைகள் காயமின்றி தப்பித்தன.
இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்தில் பெற்றோர் எல்லா சமயத்திலும் ஒரு குழந்தையை மடியில் பிடித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. குறிப்பாக, எதிர்பாராத விதமாக அல்லது தீவிரமாக விமானம் குழுங்கும்போது அல்லது திடீரென வேகம் அதிகரிக்கும்போது குழந்தையை பாதுகாப்பாக பிடித்துக் கொள்வது சாத்தியமில்லை.
இதனால், விமானத்தில் பயணிக்கும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்களுக்கான பிரத்யேக சீட்டிங் வசதியை செய்து கொடுப்பது ஒன்றே தீர்வாகும்’’ என்று கூறப்பட்டுள்ளது. விமானங்களில் பயணிக்கும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் உயர் பாதுகாப்பு கருதி, விமான நிறுவனங்களுக்கான இந்த சுற்றறிக்கையை டிஜிசிஏ அமைப்பு வெளியிட்டுள்ளது.