உக்ரைன்-ரஷ்யா மோதல், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான நிலவரத்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உக்ரைன்-ரஷ்யா இடையிலான மோதல் அதிகரித்தால் பங்குச் சந்தைகளில் பங்கு விற்பனை அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை (பேரல்) 90 டாலருக்கும் அதிகமாக உள்ளது. அதேசமயம் உக்ரைன்-ரஷ்யா பதற்றம் தணிந்தால் கச்சா எண்ணெய் விலை குறையும். உத்தர பிரதேசத்தில் 4வது மற்றும் 5வது கட்ட தேர்தல் மற்றும் மணிப்பூரில் முதல் கட்ட தேர்தல் இந்த வாரம் நடைபெற உள்ளது. தேர்தல் நிலவரங்கள் பங்குச் சந்தைகளில் முக்கிய வினையாற்றும் என எதிர்பார்க்கலாம்.
அமெரிக்க பெடரல் வங்கி வரும் மார்ச் மாதத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது, உக்ரைன்-ரஷ்யா மோதல் போன்ற காரணங்களால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர் அதாவது பங்குச் சந்தைகளில் அதிகளவில் பங்குகள விற்பனை செய்து வருகின்றனர். நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டு அளவுக்குள் உள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது பங்குச் சந்தைகளுக்கு ஆதரவான செய்தியாகும்.
வரும் வியாழக்கிழமை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்றைய தினம் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.