சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசின் சார்பில் மூன்று அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்று பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 26.01.2022 அன்று சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மூன்று அலங்கார ஊர்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்திகளை வரவேற்று, பொதுமக்கள் பெருந்திரளாக பார்வையிட்டு பயன் பெற்று, சென்னை மாநகருக்குள் (பிப் 18) இன்று மாலை அலங்கார ஊர்திகள் வர இருக்கிறது. இந்த அலங்கார ஊர்திகள் 20.02.2022 முதல் 23.02.2022 வரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காட்சிப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முதல் ஊர்தியில் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், வீராங்கனை குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், ஒண்டிவீரன், பூலித்தேவன், மாவீரன் அழகுமுத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டாம் ஊர்தியில், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரி உள்ளிட்டோரின் சிலைகளும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், மூதறிஞர் இராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, மாவீரன் பொல்லான், கொடிகாத்த திருப்பூர் குமரன், வ.வே.சு. ஐயர், காயிதே மில்லத், குமரப்பா, கக்கன், அஞ்சலையம்மாள் ஆகியோரின் புகழினை வெளிப்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டவர்களின் சிலைகளும் மூன்றாம் ஊர்தியில் இடம்பெற்றுள்ளன.