நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் ஓய்கிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி சனிக்கிழமை ஒரேகட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிநேர நடைபெறும். அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அத்துடன் ஒருபுறம் அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்குஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 7 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக , அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்கள் ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் என மாவட்டவாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பரப்புரைகளை வாக்குப்பதிவு முடிவு பெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும்.. இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்களாக இல்லாதவர்கள், தேர்தல் பணிக்காக வெளியூரில் இருந்து வந்தவர்கள் வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 19ஆம் தேதி பதிவாகும் வாக்குகள், 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.