தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3,086 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 154ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 887 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 37 ஆயிரத்து 265ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களை காட்டிலும், தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை ஊரடங்கு தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டது. இதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் கோயில்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உள்ளிட்டவை விலக்கிக் கொள்ளப்பட்டன. அத்துடன் பள்ளி, கல்லூரிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. முதல்வருடான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவத் துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.