இலக்கியத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் கவிஞர் வைரமுத்துவின் பொன்விழாவை முன்னிட்டு ‘வைரமுத்து இலக்கியம் 50’ என்ற இலட்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுதவந்து 50 ஆண்டுகள் நிறைகின்றன. அவரது முதல் கவிதை நூலான ‘வைகறை மேகங்கள்’ கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது. அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இராண்டாம் ஆண்டு மாணவர். இந்த 50 ஆண்டுகளில் அவர் 38 நூல்களும் 7500 பாடல்களும் எழுதியிருக்கிறார்.
கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இந்த ஆண்டுமுழுவதும் பல்வேறு ஊர்களிலும், மாநிலங்களிலும், நாடுகளிலும் கொண்டாடப்படவிருக்கிறது. அந்த விழாவின் தொடக்க நிகழ்வாக ‘வைரமுத்து இலக்கியம் 50’ என்ற இலட்சினையைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். “தந்தை இல்லாத இடத்தில் நீங்கள் இருந்து நிறைவு செய்ய வேண்டும்” என்று முதலமைச்சரைக் கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டார்.
28 வயதில் ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. கருவாச்சி காவியம் – வைரமுத்து கவிதைகள் மூன்றாம் உலகப்போர் – தண்ணீர் தேசம் — கொஞ்சம் தேநீர் நிறைய வானம் – திருத்தி எழுதிய தீர்ப்புகள் – வைரமுத்து சிறுகதைகள் – பெய்யெனப் பெய்யும் மழை என்று வைரமுத்துவின் படைப்புலகம் விரிந்துகொண்டே வந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ‘தமிழாற்றுப்படை’ நூல் மூன்றே மாதங்களின் பத்துப் பதிப்புகள் கண்டு தமிழ்ப் பதிப்புலகில் சாதனை படைத்திருக்கிறது.
திரைப்படப் பாடலாசிரியருக்கென்று 7 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் இவர்தான்; சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதினையும் 6 முறை வென்றவரும் இவர்மட்டும்தான்.2003இல் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாட்டின் சிறந்த புத்தகத்துக்கான ‘ஃபிக்கி’ விருதுக்குத் தேர்வு பெற்றது.
இலக்கியத்தின் பங்களிப்பிற்காக இந்தியாவின் உயர்ந்த விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷண்’ விருதும், பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் ‘சாதனா சம்மான்’ விருதும் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
அந்நாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் ‘கவி சாம்ராட்’ என்று அழைத்தார். அந்நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ‘காப்பியக் கவிஞர்’ எனறு குறித்தார். அந்நாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இவருக்குக் ‘கவிப்பேரரசு’ என்று பட்டம் அளித்தார்.இவருடைய படைப்புகள் ஆங்கிலம் – இந்தி – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் – உருது – வங்காளம் – ரஷ்யன் – நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.கவிதை – நாவல் – சிறுகதை – திரைப்பாட்டு – ஆராய்ச்சிக் கட்டுரை – திரை உரையாடல் – பயணக் கட்டுரை – சரிதை – சுயசரிதை என்று இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் இவரது பயணம் நீண்டுகொண்டேயிருக்கிறது. இலக்கியத்தின் வழியே சமூக நலப் பணிகளையும் ஆற்றிவருகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.