தமிழகத்தில் வருகிற 26 ஆம் தேதி புத்தக்கம் இல்லாத நாள் ( No Bag Day) கடைபிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இந்த புத்தகம் இல்லாத தினத்தில் 12.6 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச் செல்லும் சுமையை குறைத்து , வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதற்காக, வரும் பிப் 26 ஆம் தேதி புத்தகமில்லாத தினம் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கி , மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும் , மன அழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின் மூலம் புதிதாக கற்றுக் கொள்வதற்கும் , உடல் , மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாக இது அமையும் எனவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருக்கிறது.
புத்தகமில்லா தினத்தில் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த புத்தகம் இல்லாத தினத்தில் மாநிலம் முழுவதும் 6 – 8 வகுப்பு வரையில் உள்ள 12.6 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்ற உள்ளனர். அதன்படி மாணவர் ஒருவருக்கு ரூபாய் 10 வீதம் 12, 63, 550 மாணவர்களுக்கு மொத்தம் ரூ .1.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புத்தகமில்லா நாளில் பாரம்பரிய கலைகள் குறித்து கற்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை இன்னும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயம் சார்ந்த மூலிகைத் தாவர வளர்ப்பு , மாடித் தோட்டம் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.