இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மதரீதியாக பிளவுப்பட்ட நாடா? என்று சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஆலய பிரவேச சட்டத்தின்படி, இந்து கோயில்களில் நுழைபவர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என யாராக இருந்தாலும் முறையான உடையணிந்துதான் வரவேண்டும்,
கைலி (லுங்கி), ட்ரவுசர் போன்ற உடைகளை அணிந்து வரக்கூடாது என்றும், இதுதொடர்பாக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மதரீதியாக பிளவுப்பட்ட நாடா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்,
“பல கோயில்களில் உரிய நடைமுறைகளும், மரபுகளும் பின்பற்றப்படுகின்றன.
இவ்வாறு இருக்க, நாட்டில் ஹிஜாப், கோயில்களில் வேட்டி அணிய வேண்டும் ஆகியவற்றிற்காக போராட்டங்கள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகள் மத ரீதியாக பிளவை ஏற்படுத்தும்” என கருத்து தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஆகம விதிகளில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறியிருப்பதாக ஆதாரங்கள் உள்ளதா? இது குறித்து ஆராய்ந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய சென்னை உயர்நீதிமன்றம்,
இந்துக்கள் அல்லாதவர் மற்றும் வெளிநாட்டவருக்கு கோவில்களில் அனுமதி இல்லை என விளம்பரப்பலகை வைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.