வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். இதன்மூலம் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்திலேயே நீடிக்கும் என்பது தெளிவாகிறது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து 10ஆவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அப்படியே தொடர்கிறது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களும் அவசியமான ஒன்று.
ரெப்போ வட்டி விகிதம் என்றால் ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம். இந்த விகிதம் குறையும் பட்சத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனுக்கு குறைவான வட்டி விகிதத்தையே விதிக்கும். ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை குழுக்கூட்டத்தை நடத்துவது வழக்கம். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்திலும் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் இதே முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட முடிவுகளின்படி, ரிசர்வ வங்கியில் வங்கிகள் செய்யும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதமான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% என்ற அளவில் தான் இருக்கிறது. 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 7.8% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஊடகங்களிடம் பேசிய ஆளுநர், “சர்வதேச நிதியத்தின் அறிக்கை படி கொரோனாவுக்கு பின் உலகிலேயே இந்தியாவில் தான் பொருளாதாரம் அதிவேகமாக வளர்கிறது. தடுப்பூசி இயக்கம், நிலையான நிதிக்கொள்கையே இதற்கு காரணம்” என்றார்.