தென்னாப்பிரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் உருமாறிய ஒமைக்ரான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் இதனை கண்டு உலக நாடுகளே அஞ்சி நடுங்கின. குறிப்பாக உலக சுகாதார அமைப்பு இதனை கவலையளிக்கக் கூடிய கொரோனா வகையாக (Variant Of Concern) வகைப்படுத்தியது. அபாயகரமான டெல்டாவை விட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதாக ஒமைக்ரான் இருந்ததே அதற்கு காரணம். ஒரு மாதத்திற்குள்ளாகவே 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியது என்றால் அதன் வேகத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
அபாயகரமான டெல்டாவை விட வேகமாகப் பரவினாலும், 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களை தாக்கினாலும் 3 நாட்களில் ஓடி விடுகிறது ஒமைக்ரான். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரம். ஒரே சமயத்தில் டெல்டா 10 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஒமைக்ரான் 100 பேருக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. இதில் இரண்டுமே 1% பேரை மிக தீவிரமாக தாக்குவதாக வைத்துக் கொள்வோம். பத்தில் ஒருவரை டெல்டா அதிகமாக பாதித்தால் ஒமைக்ரான் 10 பேரை மிக மோசமாக பாதிப்புக்குள்ளாக்குகிறது.
ஆகவே இங்கே சதவீத கணக்கெல்லாம் வேலைக்கு ஆகாது. ஒமைக்ரானை லேசாக எடை போட்டுவிடக் கூடாது. இதனை உலக சுகாதார அமைப்பு (WHO) கவலையுடன் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரத்தை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என ஆதங்கப்பட்டுள்ளது. ஆம் ஒமைக்ரான் பரவலுக்கு பின்னர் 1.3 கோடி உலக மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல 5 லட்சம் மக்கள் ஒமைக்ரான் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கூட தினசரி கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தபோதிலும் இறப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
இதுதான் பல்வேறு நாடுகளின் நிலைமையும். இதுகுறித்து WHO பெருந்தொற்று இறப்புகள் தொடர்பான மேலாளர் அப்டி மஹமுத் கூறுகையில், “ஒமைக்ரானால் இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சம் பேர் மரணித்துள்ளனர். இது டெல்டாவை விட மிக மோசமான தாக்கம். ஒமைக்ரானால் தீவிர நோய் பாதிப்பு இல்லை என்ற கருத்து நிலவும் சூழலில் இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இத்தனை தடுப்பூசிகள் இருந்தும் மிக மிக குறுகிய காலத்தில் 5 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்பதை நிறைய பேர் கவனிக்க தவறிவிட்டனர். இந்த எண்ணிக்கை கணக்கில் வந்தது. கணக்கில் வராதது நிறைய இருக்கலாம்” என்றார்.