மலை இடுக்கில் 43 மணிநேரமாக சிக்கி தவித்த 23 வயதான இளைஞர் பாபு பத்திரமாக மீட்கப்பட்டார் .
கேரள மாநிலம் மலம்புழாவில் 23 வயதான பாபு என்ற இளைஞர் கடந்த 7ஆம் தேதி தனது நண்பர்களுடன் டிரெக்கிங் சென்றார் .
அப்போது கால் இடறி மலைப்பகுதியில் இருந்து உருண்டு விழுந்த அவர் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நண்பர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இளைஞரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களின் முயற்சி பலன் கொடுக்கவில்லை ,இதையடுத்து கடலோர காவல்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் இளைஞர்களை மீட்க முயற்சி செய்த நிலையில் அவர்களின் முயற்சியும் தோல்வியடைய, இந்திய ராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியது.
இதையடுத்து பெங்களூரு, வெலிங்டன் உள்ளிட்ட பகுதியில் இருந்து குரும்பச்சி மலைப்பகுதிக்கு வந்த ராணுவ வீரர்கள் இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கேரளாவில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞர் மூன்று நாட்களுக்குப் பின்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மலம்புழாவை சேர்ந்த பாபு கடந்த 7ஆம் தேதி நண்பர்களுடன் மலை ஏற்றத்திற்காக சென்ற போது சிக்கினார்.
உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்த இளைஞர் பாபுவை 43 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்திய ராணுவம் மீட்டுள்ளது.
இளைஞர் மீட்கப்பட்ட தகவலை எம்எல்ஏ சாபி பரம்பேல் உறுதிப்படுத்தியுள்ளார். மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு இளைஞரை பத்திரமாக மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட இளைஞர் சோர்வுடன் இருந்தாலும், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.