நீட் விலக்கு தொடர்பான சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நாளை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறவுள்ள நிலையில், அதை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 5 மாத கல,ம் இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்காமல் இருந்த ஆளுநர், கடந்த 1 ஆம் தேதி நீட் விலக்கு சட்ட முன்வடிவை மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க , உடனடியாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி அதனை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கலைஞர் படத்திறப்பு விழா நிகழ்ச்சி மட்டுமே புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில்லேயே சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது. மேலும் நாளை நடைபெற உள்ள நீட் விலக்கு தீர்மான சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.