புதினா செடி வளர்க்க பெரிதாக இடம் தேவையில்லை என்பதால், இடமில்லை என்பவர்கள் கூட சிறிய இடத்தில், வீட்டு ஜன்னல்களில் கூட வைத்து வளர்க்க முடியும். வீட்டு சமையலில் புதினா இலைகளைப் பயன்படுத்திவிட்டு எஞ்சியிருக்கும் தண்டு போதும், புதினா வளர்ப்பை மேற்கொள்ள.
வீட்டில் தோட்டம் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள், ஆரம்பத்தில் எளிமையாக வளர்க்கக்கூடிய சிறு சிறு செடிகளை வளர்த்துப் பழகினால் தோட்டத்தை பராமரிப்பது சுலபமாக இருக்கும். அதிகமாகச் செலவுகள் எதுவும் இல்லாமல், வீட்டில் புதினா வளர்ப்பை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம். இதற்குப் பெரிதாக இடம் எதுவும் தேவையில்லை என்பதால், இடமில்லை என்பவர்கள் கூட சிறிய இடத்தில், வீட்டு ஜன்னல்களில் கூட வைத்து வளர்க்க முடியும். 15 நாள்களில் அறுவடை செய்து கொள்ளலாம். வீட்டு சமையலில் புதினா இலைகளைப் பயன்படுத்திவிட்டு எஞ்சியிருக்கும் தண்டு போதும், புதினா வளர்ப்பை மேற்கொள்ள.
ஸ்டெப் 1:
தரமான, தடிமனான, குறைந்தபட்சம் இரண்டாகக் கிளைத்திருக்கும் புதினா தண்டை எடுத்துக்கொள்ளவும். அதில் இலைகள் அனைத்தையும் நீக்காமல், மேலே இரண்டு இலைகளை விட்டுவைக்கவும்.
ஸ்டெப் 2:
ஒரு கண்ணாடி டம்ளரில், பாதியளவு நீர் எடுத்துக் கொள்ளவும். அதில், நாம் எடுத்து வைத்திருக்கும் புதினா தண்டுகளை வைக்கவும். டம்ளரில் நீரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். டம்ளரை வெயிலில் வைக்கவே கூடாது.
ஸ்டெப் 3:
கண்ணாடி டம்ளரில் வைத்திருக்கும் புதினா தண்டுகள் ஐந்து நாள்களுக்குப் பின் வேர் விட ஆரம்பித்திருக்கும். மேலே இருந்த இரண்டு இலைகளுடன் இன்னும் சில இலைகள் வளர ஆரம்பித்திருக்கும். இப்போது இந்தத் தண்டை எடுத்து மண்ணில் நட வேண்டும். ஏற்கெனவே வேர் விட்டிருக்கும் புதினா தண்டுகளை மண்ணில் ஊன்றும்போது நன்றாக வளர ஆரம்பிக்கும்.
ஸ்டெப் 4:
புதினா படர்ந்து வளரக்கூடிய செடி என்பதால் குறுகிய தொட்டிகளிலோ, பைகளிலோ வைக்க வேண்டாம். அகலமான தொட்டிகளில், குரோ பேக்குகளில் வைக்கவும்.
தொட்டி/குரோ பேக்கில் மண் கலவையை தேங்காய் நார் கழிவுகள் 30%, மண்புழு உரம் 30%, செம்மண் 40% எனக் கலந்து தயாரிக்க வேண்டும். இப்படி தயாரித்த மண் கலவையில், விரல்களால் குழி பறித்து புதினா தண்டுகளை நட வேண்டும்.
நேரடியாக சூரியஒளிபடும் வகையில் புதினா தண்டு நட்ட தொட்டியை வைக்கக் கூடாது. ஆனால் புதினா செடியின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி தேவைப்படும் என்பதால் அதற்கு ஏற்றார் போன்ற இடத்தில் வைக்க வேண்டும்.
பத்து நாள்களில் புதினா வளர்ந்துவிடும். பின்னர், மேல் இருக்கும் இலைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால் கீழிருக்கும் இலைகளுக்கு சூரிய ஒளி கிடைக்கும்.