கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் தனம். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் இவருக்கு ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழும் மருத்துவமனை சார்பில் அவருக்கு வழங்கப்பட்டது. இச்சூழலில் தனம் மீண்டும் கர்ப்பமாகிவிட்டார். அவருக்கு 2017ஆம் ஆண்டு மூன்றாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் தனம் வழக்கு தொடர்ந்தார்.
குடும்ப கட்டுப்பாடு சரியாக செய்யாத காரணமாகவே மூன்றாவதாக கர்ப்பமானதாகவும் இதற்கு காரணமான அரசு மருத்துவமனை சார்பில் அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கூறியிருந்தார். குழந்தையை வளர்ப்பதற்கான செலவையும் அக்குழந்தைக்கும் அரசின் அனைத்து சலுகைகளை வழங்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியடையவும் வாய்ப்புள்ளது. இந்த விஷயம் மனுதாரருக்கும் அறுவை சிகிச்சைக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், கர்ப்பமானது தெரிந்தவுடன் வந்திருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை தரப்பட்டிருக்கும். எனவே, அவர் இழப்பீடு கோர முடியாது” என்று வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “மருத்துவர்கள் உரிய முறையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை என்பது தெளிவாகிறது. 3ஆவது பெண் குழந்தை பிறந்ததால், அதற்கு திருமணம் செய்துவைக்கும் வரை பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
ஆகவே அப்பெண்ணுக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல அக்குழந்தைக்கு 21 வயதாகும் வரை அக்குழந்தையின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும். இதற்காக மாதம் ரூ.10 ஆயிரம் எனக் கணக்கிட்டு மனுதாரருக்கு ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் வழங்க வேண்டும். இந்த மூன்றாவது பெண் குழந்தையையும் அரசின் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் சேர்த்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.