புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
புதுச்சேரியில் புத்தாண்டுக்கு பிறகு கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. ஜனவரி மாத மத்தியில் அங்கு தொற்று பரவல் உச்சத்தில் இருந்தது. கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்தது. அதனால் ஜனவரி 18 முதல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு சேவை நிறுத்தப்பட்டது.
வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு ஆலோசனைக்காக வரும்போது கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு கொரோனா பரவும் அபாயம் இருந்ததால், அதனைக் கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. 50 நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு, மற்றவர்களுக்கு தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 7ம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் வழக்கம் போல் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை பிரிவுகளும் செயல்படும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.